Close
பிப்ரவரி 22, 2025 11:33 மணி

தோரணவாயில் இடிக்கும் பணிகளை அலட்சியமாக மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகம்: பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழப்பு

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்தத்தில் பொக்லைன் ஆப்ரேட்டர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரர் படுகாயமடைந்தார்.

ஐந்தாம் உலக தமிழ் மாநாட்டை முன்னிட்டு 1981 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி மதுரை மாநகருடைய கிழக்கு நுழைவாயில் பகுதியான மாட்டுத்தாவணி பகுதியில் நக்கீரர் தோரண வாயில்  கட்டப்பட்டிருந்தது.
தற்போது மாட்டுத்தாவணி பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் பல்வேறு வணிக நிறுவனங்கள் உருவான நிலையில் மாட்டுத்தாவணி சாலை விரிவாக்க பணிகளும் நடைபெற்றுள்ளது.
இதில், நாள்தோறும் நக்கீரர் தோரண வாயில் உள்ள சாலை வழியாக பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் தோரணவாயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள நக்கீரர் தோரண வாயில் மற்றும் கே.கே.நகர் மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள தோரணவாயில் ஆகிய இரண்டு தோரண வாயில்களையும் இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்நிலையில் , மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரர் தோரணவாயில் கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று இரவு தொடங்கியது. அப்போது ஆங்காங்கே சாலைகளில் போக்குவரத்து செல்லவும், பொதுமக்கள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் வைத்து போக்குவரத்து காவல்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்
இதைத்தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர் மூலமாக நக்கீரர் தோரணவாயில் இடிப்பதற்காக இரண்டு பொக்லைன் இயந்திரம் மூலமாக இடிக்கும் பணி நடைபெற்றது.
அப்போது ,தோரண வாயில் ஒருபுறம் உள்ள தூணின் அருகே பொக்லைன் இயந்திர ஆபரேட்டர் இடித்த போது திடீரென தோரணவாயில் தூண் இடிந்து பொக்லைன் இயந்திரத்தில் விழுந்தது.
இதில், பொக்லைன் ஆபரேட்டரான உலகாணி அருகேயுள்ள பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் என்ற இளைஞர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், பொக்லைன் இயந்திரத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரரான மதுரை சம்பக்குளத்தைச் சேர்ந்த நல்லதம்பிக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
உடல் நசுங்கி உயிரிழந்த நாகலிங்கத்தின் உடல் 3 மணி நேரத்திற்கு பின்பாக கிரேன்கள் மூலமாக தோரண வாயில் தூண்கள் அகற்றப்பட்ட பின்பு மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது .
பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையில் உள்ள பிரம்மாண்டமான தோரண வாயில் கட்டிடத்தை இடிக்கும் பணியின் போது உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால் இதுபோன்று விபத்து ஏற்பட்டு ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் நடந்து விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர் .
இதனிடையே, விபத்து நடைபெற்ற பகுதிக்கு மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் வந்து பார்வையிட்டார்.
விபத்து நடைபெற்ற பகுதியில் பொதுமக்கள் வருவதை தடுக்கும் வகையில் முழுவதிலும் காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன மேலும், சென்னை செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று சாலை மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து, புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top