Close
பிப்ரவரி 22, 2025 1:13 மணி

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசு மெத்தனம்: பாஜ மாநில தலைவர் குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்ட பாஜ அலுவலகத்தில், மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி அளித்தார்.

மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றுவதில், தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என பாஜ மாநில தலைவர் வி.பி.துரைசாமி குற்றம் சாட்டினார்.
நாமக்கல் மாவட்ட பாஜ அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், மாநில பாஜ துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்துகொண்டு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
பார்லிமெண்டில் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்த பட்ஜெட்டில், இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பை இந்தியாவில் உள்ள அனைவரும் வரவேற்றுள்ளனர். குறிப்பாக கோடிக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட்டில் தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் டில்லி சட்டசபை தேர்தலில், 70 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்று 27 ஆண்டுகளுக்குப்பிறகு பாஜ ஆட்சியைப் பிடித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தில் ரூ 3,124 கோடி மதிப்பில் சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் ஆகிய 4 இடங்களில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகரில் பிரதமரின் மிகப் பெரிய நெசவுப்பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு முதற்கட்டமாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரயில்வே நிலையங்களை மேம்படுத்தவும், புதிய ரயில்களை இயக்குவதற்கும், மெட்ரோ ரயில் சேவைகளை துவக்குவதற்கும், ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கும் மத்திய அரசு பல ஆயிரக்கணக்கான கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஏற்கனவே ஏர்போர்ட் விரிவாக்கம், ரயில்நிலையம் விரிவாக்கம், தொழிற்போட்டைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி தமிழகத்தில் செலவிடப்படாமல் உள்ளது. குறிப்பாக மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள் மாநில அரசின் மூலமே நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.

மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழகத்தில் நில எடுப்பு பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசு மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்காக, தமிழகத்தில் 24 சதவீதம் மட்டுமே நில எடுப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதம் 76 சதவீதம் நில எடுப்பு பணிகள் நடைபெறாததால் திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளன.

தமிழக அரசு ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்து பெற்ற நிதி எவ்வளவு எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்திலும், பாண்டியிலும் மொத்தம் 40 எம்.பிக்கள் எதிர்க்கட்சியில் உள்ளனர். இவர்கள் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி கேட்டோம், அதில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று விபரமாக நாடாளுமன்றத்தில்  பேச வேண்டும்.

அதை விடுத்து தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று, பொத்தாம் பொதுவாக, திமுகவினர் வீதிக்கு வந்து கண்டனக் கூட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு, நகரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்துள்ளமைக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்காக பாஜ சார்பில் அருள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்மீது விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியரை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களின் விருப்பப்பட்டி ராசிபுரம் ஏடிசி டெப்போ அருகில் அல்லது, ஆண்டகளூர் கேட் அருகில் புதிய பேருந்து நிலையம் அமைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, நகர தலைவர் தினேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top