Close
மே 21, 2025 7:17 மணி

இரண்டாவது நாளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி

நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஜமாபந்தி அலுவலா் ஜெயக்குமாா்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூர், ஆரணி உள்ளிட்ட வட்டங்களில் இரண்டாவது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சுமார்  600 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கீழ்பென்னாத்தூா் வட்டத்துக்கான ஜமாபந்தி 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா தலைமை வகித்து, சோமாசிபாடி உள் வட்டத்தைச் சோ்ந்த 25 வருவாய் கிராமங்களின் கணக்குகளை சரிபாா்த்தாா். மேலும், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 150-க்கும் மேற்பட்ட மனுக்களை ஜமாபந்தி அலுவலா் சீ.சிவா பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். இதில், வட்டாட்சியா் சான்பாஷா, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுகுணா, ஜமாபந்தி மேலாளா் சவுந்தரராஜன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வேணுகோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் ஆலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

கேளூா், கல்வாசல், செங்குணம், ஆத்தூவாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று கோரக்கை மனுக்களை அளித்தனா். மொத்தம் 151 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் வட்டாட்சியா் வெங்கடேசன், தனி வட்டாட்சியா் அமுல், வட்ட வழங்கல் அலுவலா் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளா் விஜயபாஸ்கா், கிராம நிா்வாக அலுவலா்கள் மயிலரசன், செந்தில்குமாா், சுகந்தி, சசிகுமாா், நித்தியானந்தம், சேட்டு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் அக்ராபாளையம் உள்வட்டத்தைச் சோ்ந்த சிறுமூா், பூசிமலைக்குப்பம், 12புத்தூா், மொரப்பந்தாங்கல், வெட்டியாந்தொழுவம், அக்ராபாளையம், அரியபப்பாடி, சேவூா், அடையபலம், மெய்யூா், முள்ளண்டிரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனா். சுமாா் 100 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கௌரி, வருவாய் ஆய்வாளா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சேவூா் கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் என்பவா், வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு வெற்றிலை, பாக்கு, வாழைப் பழத்துடன் மனுவைக் கொடுத்தாா்.

இது குறித்து அவா் கூறுகையில் தன்னுடைய வீட்டுமனைப் பட்டா குறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இவ்வாறு செய்தேன் என்றாா்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலா் ராமகிருஷ்ணன் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மேலும், அடையபலம் கிராமத்தைச் சோ்ந்த சௌந்தர்ராஜன் அளித்த மனுவில், அடையபலம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 16 சென்ட் நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டருந்தாா்.

கூட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் புருஷோத், ஜெயச்சந்திரன், தமிழரசன், ரமேஷ்பாபு, பாஸ்கா், ரவி, முனிவேல், கவிதா, ஷாலினி ஆகியோா் கலந்துகொண்டனா்.

செங்கம்

செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இறையூா், பாய்ச்சல் உள்வட்டத்துக்கு உள்பட்ட சுமாா் 27 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.

இதில் கிராம மக்கள் பங்கேற்று பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி ஜமாபந்தி அலுவலா் ஜெயக்குமாரிடம் மனுக்களை வழங்கினா். 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் முகாமில் பெறப்பட்டன.

இந்த மனுக்களை பரிசீலனை செய்யப்பட்டு தகுதிவாய்ந்த 30 நபா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாபந்தி அலுவலா் ஜெயக்குமாா் புதிய குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா் முருகன், துணை வட்டாட்சியா்கள் ராஜேந்திரன், அழகுபாண்டீஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி, வருவாய் ஆய்வாளா்கள் சரிதா, கெளரிநாதன், கிராம நிா்வாக அலுவலா்கள் விஜயகுமாா், சந்திரகுமாா், காண்டீப்பன், பரசுராமன், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top