திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை, மேலத்திகான் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மீனாம்பிகை தலைமை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்துப் பேசியதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களின் குழந்தைகள் நலன் கருதி அவர்கள் பயன்பெறும் வகையில் பிஎம் ஜன்மன் திட்டத்தின் கீழ் புதிய குழந்தைகள் மையங்கள் தோற்றுவிக்க ஒப்புதல் வழங்கப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் 10 புதிய மையங்கள் தற்காலிக கட்டடத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க , பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு வழிகாட்டுதலின்படி, பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் அவர்களின் நலனுக்காக திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள மேலத்திக்கான் எம்ஜிஆர் நகர் பகுதியில் இருளர் குடியிருப்பு பகுதியில் புதிய அங்கன்வாடி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தொடர்ந்து, திருவண்ணாமலை மேலத்திக்கான் ஊராட்சியில் கீழ்அணைக்கரை புதுத்தெரு, தென்மாத்தூர் ஊராட்சியில் சு.கீழ்நாச்சிப்பட்டு அண்ணாமலை நகர், தண்டராம்பட்டு வட்டாரம், வேப்பூர்செக்கடி ஊராட்சியில் நேதாஜி நகர், கொளமஞ்சனூர் ஊராட்சியில் ஒலகலப்பாடி பகுதியில், மேல்பாச்சார் ஊராட்சியில் உள்ள கோவில் தெரு, மோத்தக்கல் ஊராட்சியில் மேல்முத்தனூர் பகுதியில் உள்ள அண்ணா நகர், செங்கம் வட்டாரம், மேல்ராவந்தவாடி ஊராட்சியில் நரடாப்பட்டு பகுதியிலும், நீப்பத்துறை ஊராட்சியில் உள்ள இருளர் நகர் பகுதியிலும், வந்தவாசி வட்டம் கோவளை ஊராட்சியிலும், தெள்ளார் வட்டாரம், பொன்னூர் ஊராட்சியில் உள்ள ஜகநாதபுரம் பகுதியில் என 10 இடங்களில் புதிய அங்கன்வாடி மையம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகனராமன், கிராமப்புற குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் வீணா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.