சென்னை, திருவொற்றியூரில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களி டமிருந்து சுமார் 70 கிலோ எடையுள்ள புகையிலை குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
திருவொற்றியூர் கன்னி கோயில் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் இங்குள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து பல்வேறு கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த திருவொற்றியூர் மேட்டு தெருவை சேர்ந்த சுகுமார்( 35),
புது வண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவை சேர்ந்த தஸ்புதின் (43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் விற்பனைக்காக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 70 கிலோ எடையுள்ள புகையிலை குட்கா பொருள்கள் மற்றும் இவற்றை தயார் செய்ததற்கான மிக்ஸி உள்ளிட்ட உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவொற்றியூர் காவல் நிலைய போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் திருவொற்றியூர் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.