Close
நவம்பர் 24, 2024 10:41 மணி

பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவது தொடர்ந்தால் போராட்டம்.. ஈரோடு மாவட்ட பாஜக அறிவிப்பு

ஈரோடு

பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம்

பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவது தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என ஈரோடுதெற்கு மாவட்ட பாஜக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவுடன், அழுகிய முட்டைகளை மாணவர்களுக்கு விநியோகம் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
இதேநிலை நீடித்தால் கட்சித் தலைமையின் அனுமதி பெற்று பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுப்பு உண்மையான ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக அறிவித்துள்ளது.

அண்மையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்துணவுடன் அழுகிய முட்டை விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா மற்றும் கொடுமுடி தாலுகாவில் உள்ள பல பள்ளிகளில், கடந்த புதன்கிழமை முதல் அடுத்தடுத்த நாட்களில், மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக மாணவ, மாணவியருக்கு மதிய உணவில் முட்டை வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர். சுமார் 2,000 முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாணவர்கள் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தாலும், தவறு செய்தவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைப்பதில்லை. குறைந்தபட்சம், முட்டை வழங்கும் நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கிட, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்த போஷான் அபியான் திட்டம் மூலம், கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ரூ.2,907 கோடி ரூபாய். சராசரியாக வருடத்திற்கு 50 லட்சம் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைகிறார்கள்.

ஆனால், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுந்தாலும், அதைக் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் இருந்து வருகிறது திமுக அரசு. குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எத்தனை முறை மதிய உணவில் அழுகிய முட்டைகளைக் கொடுத்தார்கள் என்பதற்குக் கணக்கே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் திமுகவுக்கு இளக்காரமாக உள்ளது.

உடனடியாக, மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கி அவர்கள் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவில் அழுகிய முட்டை வினியோகம் செய்வது தொடர்ந்தால் கட்சித் தலைமையின் அனுமதி பெற்று மாவட்ட பாஜக சார்பில் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் தெரிவித்துள்ளார்.

# செய்தி: மு.ப.நாராயணசுவாமி#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top