Close
நவம்பர் 22, 2024 4:52 காலை

நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சூரியமூர்த்தியை ஈரோட்டில் கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ஈஸ்வரன் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பேச்சுவார்த்தைக்காக சென்ற முதல் நாளிலேயே நாமக்கல் தொகுதியில் கொமதேக போட்டியிடுவது என முடிவு செய்து அறிவிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.

கூட்டணிக் கட்சிகளின் சீட்டு பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்த பின்னரே வேட்பாளரை அறிவிப்பது என இத்தனை நாட்களாக காத்திருந்தோம். எங்களது கட்சியின் ஆட்சி மன்றக் குழுவினரின் ஒப்புதலுடன் இன்று நாமக்கல் தொகுதியின் கொமதேக வேட்பாளராக எங்கள் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் சூரியமூர்த்தி- யை அறிவிக்கிறோம்.

ஊடக நண்பர்கள் எங்களது பிரசாரத்திற்கும் கருத்துகளுக்கும் முன்னுரிமை வழங்கி ஆதரவு அளிக்க வேண்டும். கடந்த தேர்தலில் எங்கள் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி நாமக்கல் தொகுதியில் வேட்பாளரை அறிவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்த வரை அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வெற்றி பெறும் வாக்குகளின் வித்தியாசத்தை அதிகப்படுத்த கடுமையான உழைப்பை செலுத்த வேண்டும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த தேர்தலிலும் தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

இந்த தேர்தலை பொருத்த வரையிலும் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கான தேர்தலாக தான் நாங்கள் பார்க்கிறோம். ஆளும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கத்தில் இந்தியா கூட்டணியை வலுவாக அமைத்து இருக்கிறோம்.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவும் அதிமுகவும் தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைக்க தான் போகிறது. இதுவரையிலும் மத்தியில் ஆளும் பாஜகவை அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த விதமான எதிர் கருத்துகளையோ, விமர்சனத்தையோ முன் வைக்கவில்லை.

பாஜக மட்டுமே எங்களது எதிரி. கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் பாஜக திட்டமிட்டு விஞ்ஞான ஊழல் புரிந்து ஸ்டேட் வங்கி இடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளது. பாஜக பெரும் ஊழல் புரிந்திருப்பதை, தேர்தல் பத்திரங்களை வெளியிடுமாறு எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது.

எல்லா கட்சிகளும் தேர்தல் நிதி வசூல் செய்வது வழக்கமான ஒன்றுதான்.
பாஜகவை பொறுத்த வரை ஒவ்வொரு நிறுவனங்களிலும் அமலாக்க துறை, சிபிஐ, வருமானவரித் துறை ரெய்டு நடத்தி அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் தேர்தல் பத்திரம் மூலம் மாபெரும் ஊழல் புரிந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. இந்த ஊழல் விவகாரத்தால் பாஜக தோல்வியையே சந்திக்கும்.
இந்தியா கூட்டணி வெற்றி அடைந்த பிறகு பிரதமர் யார் என்பதை கூட்டணி கட்சிகள் ஒன்று கூடி அறிவிப்பார்கள்.

கடந்த தேர்தலை போன்று இந்த முறையும் உதயசூரியன் சின்னத்திலேயே கொமதேக போட்டியிடும் என்றார் ஈஸ்வரன் . பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் கொங்கு கோவிந்தசாமி, ஈஸ்வரமூர்த்தி, துரைராஜா உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.

செய்தி- நாராயணசுவாமி.மு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top