நாமக்கல் :
அசல் ஆவணங்களை திருப்பி தராத வங்கி வாடிக்கையாளருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் கிராமம், அய்யக்கல் புதூரில் வசித்து வருபவர் நடராஜன் (77). இவருக்கு சொந்தமான நிலத்தின், அசல் ஆவணத்தை அடமானம் வைத்து இவரது மனைவியும் இவரும் கோயம்புத்தூரில் உள்ள அரசு பேங்க் ஒன்றில் கடந்த 1990ம் ஆண்டு வணிக அபிவிருத்திக்கடனாக ரூ. 10 லட்சம் பெற்றனர்.
கடனை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில், பேங்கின் சார்பில் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நடராஜன் மீதும் அவரது மனைவி லட்சுமி மீதும் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர், பேங்கிற்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட சமரச ஒப்பந்தப்படி ரூபாய் ரூ. 15 லட்சத்தை பெற்ற கடனுக்காகவும் வட்டிக்காகவும் நடராஜன் திருப்பி செலுத்தியுள்ளார். இதனை அடுத்து வங்கியின் சார்பில் கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் சமர்ப்பித்திருந்த அசல் ஆவணங்களை திருப்பி வழங்காததால் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், பேங்கின் மீது கடந்த ஆக. மாதம் நடராஜன் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரணை முடிவடைந்து, நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், கணக்கு முடிந்த பிறகு ஆவணத்தை வழங்காமல் காலதாமதம் செய்து வருவது வங்கியின் சேவை குறைபாடு என்று கூறப்பட்டுள்ளது.
4 வாரத்துக்குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு அவரது அசல் ஆவணத்தை திரும்ப வழங்கவும், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் வழங்கவும் வங்கிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களுக்குள் இழப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சத்தை வழங்கத் தவறினால் காலதாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளும் ரூ. ஆயிரம் கூடுதல் இழப்பீட்டுத் தொகையாக கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.