Close
டிசம்பர் 12, 2024 1:55 மணி

கார்த்திகை மாத 4வது சனிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு முத்தங்கி அலங்காரம்

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு கார்த்திகை மாத 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.

இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார். தினசரி கட்டளைதாரர்கள் மூலம், காலையில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெறும்.
இன்று, கார்த்திகை மாதம் 4வது சனிக்கிழமையை முன்னிட்டு, காலை 9 மணிக்கு 1,008 வடைமாலை சார்த்தப்பட்டு தீபாராதணை நடைபெற்றது. பின்னர், நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம், உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு முத்துக்களால் செய்யப்பட்ட, சிறப்பு முத்தங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திரளான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் செயல் அலுவலர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top