புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு சென்று, வர வசதியாக பேருந்து வசதி கேட்டு இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூரில் பட்டுக்கோட்டை சாலையில் இயங்கி வருகிறது அரசு கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரிக்கு சுற்று வட்டாரத்தில் இருந்து மாணவ, மாணவிகள் சென்று வரும் வகையில் போதுமான பேருந்து வசதிகள் இல்லை.
இக்கல்லூரிக்கு கீரமங்கலத்தில் இருந்து கொத்தமங்கலம், வெள்ளாகுளம், கீழாத்தூர், கே.ராசியமங்கலம், வெட்டன்விடுதி வழியாக கறம்பக்குடிக்கும், ஆலங்குடியில் இருந்து கீழாத்தூர், வடகாடு, மாங்காடு, அணவயல், ஆவணம் வரையிலும் கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் சென்று வரும் வகையில் அரசு நகரப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வாசுதேவன், முன்னாள் மாவட்டச் செயலாளர் குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கையெழுத்துக்கள் அடங்கிய கோரிக்கை மனுக்களை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் அளிக்க உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.