நாமக்கல்லில் இருந்து அரபுநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி விரைவில் சீரடையும் என முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு முட்டை மற்றும் கோழிப்பண்ணை பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் ராணா ராஜேந்திரன், கேசவன் ஆகியோர், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய, நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,200 முட்டையினக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6.50 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவற்றில் 50 லட்சம் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கு தினசரி லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்தியாவில் நாமக்கல் மண்டலம் முட்டை ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தினமும் சராசரியாக 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உலகிலேயே தரமான முட்டைகள் குறைந்த விலையில், நாமக்கல் மண்டலத்தில் இருந்து மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாமக்கல் பகுதியில் உள்ள சீதோஷ்ண நிலையில் கோழிப்பண்ணைகளில் 50 முதல் 52 கிராம் எடையுள்ள முட்டைகள் அதிகம் உற்பத்தியாகிறது. இந்த முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போது, வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டு அரசு, முட்டை இறக்குமதியில் கடந்த நவம்பர் மாதம் புதிய கொள்கையை கொண்டு வந்துள்ளது. 60 கிராம் மற்றும் அதற்கு மேல் எடை கொண்ட முட்டைகள் மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அறிவித்தது.
இதனால் நாமக்கல்லில் இருந்து கத்தார் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது கடந்த 2 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக ஓமன் நாடும் இந்திய முட்டை இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால் அங்கும் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளுக்கு மாதம்தோறும் சுமார் 150 கண்டெய்னர்களில் முட்டைகள் அனுப்பப்பட்டு வந்தன. கடந்த 2 மாதங்களாக முட்டை ஏற்றுமதி பாதியாக குறைந்துவிட்டது. ஓமன் நாட்டின் சோஹார் துறைமுகத்தில் கடந்த 10 நாட்களாக, நாமக்கல் முட்டைகள் 41 கண்டெய்னர்களில் சுமார் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
இந்த பிரச்சினை குறித்து, தீர்வு காண, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை விடுத்தோம். அவர் இது குறித்து ராஜ்யசபையில் பேசினார். அதைத்தொடர்ந்து, மத்திய அரசு முட்டை ஏற்றுமதி தடைபடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் ஏற்பாட்டின் பேரில், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஓமன் நாட்டில் உள்ள, இந்திய தூதரம் மூலம் அந்த நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் இறக்குமதியாளர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக வருகின்ற 22-ம் தேதி 2-ம் கட்ட பேச்சுவார்த்தை ஓமன் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அமைச்சகத்துடன் நடைபெற உள்ளது. அதன் பிறகு முட்டை ஏற்றுமதி சீரடையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனவே கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள் முட்டை ஏற்றுமதி குறித்து அச்சம் அடைய வேண்டாம். முட்டை தேக்கம் என்பது தற்காலிகமானது தான். விரைவில் இதற்கான தீர்வு கிடைத்துவிடும்.
வழக்கம்போல் நாமக்கல்லில் இருந்து கத்தார், ஓமன் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி தொடர்ந்து நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.