Close
டிசம்பர் 22, 2024 10:07 மணி

மாநில வினாடி – வினா போட்டிக்கான தகுதித் தேர்வு : உயர் அதிகாரிகள் உட்பட 111 பேர் பங்கேற்பு..!

நாமக்கல்லில் நடைபெற்ற, மாநில திருக்குறள் வினாடி-வினா போட்டிக்கான தகுதித்தேர்வில், அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.

நாமக்கல் :

நாமக்கல்லில் நடைபெற்ற, திருக்குறள் வினாடி-வினா போட்டிக்கான தகுதித்தேர்வில், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 111 பேர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி, 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி- வினா போட்டி, வரும் 28 ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறுகிறது.

இதையொட்டி, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில், தகுதிக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு, மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், முதல்நிலை எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்விற்காக, மாவட்டம் முழுவதும் இருந்து, ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 202 பேர் விண்ணப்ம் செய்திருந்தினர். தகுதித் தேர்வில் 92 பேர் பங்கேற்கவில்லை. தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், தாசில்தார் உள்ளிட்ட மொத்தம் 111 அரசு அரசு ஊழியர்கள் தேர்வில் கலந்துகொண்டனர்.

கல்வித்துறை முதன்மை கண்காணிப்பாளர் ஜெகதீசன் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது. டிஇஓ கற்பகம் தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பாரதி, சிஇஓ அலுவலக நேர்முக உதவியாளர் (இடைநிலை) சந்திரசேகரன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் தேர்வை நடத்தினார்கள்.

இந்த முதல்நிலை எழுத்துத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும், 9 பேர் தேர்வு செய்யப்பட்டு, மூன்று குழுக்களாக பிரித்து, வரும் 28ம் தேதி, விருதுநகரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

மாநில அளவில் இறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசு ரூ. 2 லட்சம், 2ம் பரிசு ரூ. 1.50 லட்சம், 3ம் பரிசு ரூ. 1 லட்சம் வீதம் பரிசு வழங்கப்படும், மேலும், மற்ற குழுக்களுக்கு ஊக்கப்பரிசாக ரூ. 25,000 வீதம் வீதம் வழங்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top