குறைபாடான ஆர்.ஓ குடிநீர் மெசின் விற்பனை செய்த நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகரன், இவரது மனைவி பிரேமா. ராசிபுரம் அருகே உள்ள ஆர். கவுண்டம்பாளையத்தில் வசித்து வருபவர் செங்கோட்டையன்.
இவர்கள் இருவரும் நாமக்கல்லில் கோட்டை ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில், வீட்டுக்காக தலா ஒரு ஆர்ஓ குடிநீர் மெசினை கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் வாங்கினார். 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட மெசின் என்று விற்பனையாளர் தெரிவித்ததால் ஒவ்வொரு மெசினுக்கு ரூ. 20,000 வீதம் செலுத்தியுள்ளனர். வீட்டில் அதனை பொருத்திய பின்பு, தண்ணீரின் கொள்ளளவை அளவிட்ட போது 4 லிட்டர் மட்டுமே பிடிக்கக் கூடியதாக இருந்துள்ளது.
விற்பனை செய்த கடைக்காரரிடமும், அதன் உற்பத்தியாளரிடமும் பலமுறை புகார் அளித்தும், மெசினை மாற்றி 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட மெசினை அவர்கள் வழங்கவில்லை.
மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர், ஆர்ஓ மெசின் விற்பனை செய்த கடைக்காரர் மற்றும் உற்பத்தி செய்த நிறுவனத்தின் மீது, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2024 ஏப்ரலில் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் இன்று தீர்ப்பளித்துள்ளனர். அதில், 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆர்ஓ மெசினுக்கு பணம் பெற்றுக்கொண்டு, 4 லிட்டர் கொள்ளவு கொண்ட மெசினை வழங்கியது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெசினை விற்பனை செய்த டீலர், சட்டப்படி அதற்கு ரசீது வழங்கவில்லை. நேர்மையற்ற வணிக நடைமுறையில் ஈடுபட்டதால், வழக்கு தாக்கல் செய்துள்ள ஒவ்வொருவருக்கும் மெசினை விற்பனை செய்த கடைக்காரர் இழப்பீடாக ரூ. 30 ஆயிரமும், மெசின் உற்பத்தி நிறுவனம் ரூ. 20 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.