Close
ஜூன் 15, 2025 12:08 காலை

மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

புதிய வீடுகள் கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, நல்லவன்பாளையம் ஊராட்சி, சமுத்திரம் பகுதியில் இலங்கைத் தமிழா்களுக்கு 60 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல, கண்ணந்தம்பூண்டி ஊராட்சியில் இலங்கைத் தமிழா்களுக்கு 76 புதிய குடியிருப்புகளும், கீழ்செட்டிப்பட்டு ஊராட்சியில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் கலைஞா் கனவு இல்லம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ்  நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடர்ந்து கணத்தம்பூண்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றாக அணுகுகிறார்களா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் பணியில் இருந்த மருத்துவர்களிடம் நாளொன்றுக்கு எவ்வளவு நோயாளிகள் சிகிச்சை பெற வருகை தருகின்றனர் என்பது குறித்தும், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பிரசவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைய மருந்தகத்திற்கு சென்று இருப்பில் உள்ள மருந்துகள் குறித்தும், நாய்க்கடி மற்றும் விஷப்பூச்சி மருந்துகள் இருப்பில் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு மருந்துகள் முறையாக இருப்பில் வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்த விவரங்கள் பதிவேடுகளில் பதிவிடப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு, காட்டாம்பூண்டி ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பராமரிக்கப்பட்டு வரும் 9 ஏக்கா் நாற்றாங்கால் உற்பத்தி மையத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடி, கொடி, மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருவதையும், அடா்வண மியாக்கி முறையில் 1,500-க்கும் மேற்பட்ட மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருவதையும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, திருவண்ணாமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிருத்திவிராஜ் (கிராம ஊராட்சி), பரமேஸ்வரன் (வட்டார ஊராட்சி) மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top