Close
மே 16, 2024 4:45 மணி

தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல் படுத்தப்படும் மானியத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற இணையத்தில் பதிவு செய்யலாம்

புதுக்கோட்டை

தோட்டக்கலைப்பயிர்களுக்கு மானியம்

புதுக்கோட்டை மாவட்ட தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல் படுத்தப்படும் மானியத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற இணையத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை மூலம் நடப்பு ஆண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் வீரிய ஒட்டுரக காய்கறிகளான கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி ஆகிய குழிதட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு எக்டர் ஒன்றுக்கு 15 ஆயிரம் நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் சேர்த்து ஒரு எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலும், பழப்பயிர்கள் கொய்யா, திசு வாழைக்கன்று, பப்பாளி செடிகள், எலுமிச்சை பதியன்கள், அத்தி, நெல்லி, பலா ஒட்டுச்செடிகள் ஆகியவையும், இதற்கான இடுபொருட் களும் 40 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

மேலும், மல்லிகைச் செடிகள், செண்டிப்பூ குழிதட்டு நாற்றுகள், நறுமண பயிர்களான மிளகு செடிகள், மலைத் தோட்ட பயிரான முந்திரி ஒட்டுச்செடிகள் சாதாரண நடவுமுறை மற்றும் அடர்நடவு முறைக்கு தேவையான செடிகள் மற்றும் அதற்கான இடுபொருட்களும் 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

தேனீ வளர்ப்புக்கு 40 சதவீதம் மானியமும், பயிர்களில் நீர், களை மேலாண்மைக்காக நிலப்போர்வைகள் அமைத்திட 50 சதவீதம் மானியத்திலும், மண்புழு உரதொட்டி அமைத்திட மானியம் 50 சதவீதமும் வழங்கப்படவுள்ளன.

அங்கக வேளாண்மை சாகுபடி செய்து வரும் குழுக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர மினி டிராக்டர், பவர்டில்லர்கள் பின்னேற்பு மானியத்தில் வழங்கப்பட உள்ளன. நகரும் காய் கனி விற்பனை வண்டிக்கு 50 சதவீதம் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.

பிற திட்டங்களான தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் மற்றும் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டங்களின் மூலம் வாழை, எலுமிச்சை, வெங்காயம், முருங்கை, அரசு பெண்கள் விடுதிகளில் தோட்டம் அமைத்தல், வாழை மற்றும் தென்னை பயிர்களின் ஊடு பயிரிடுதல் போன்ற திட்டங்களுக்கு 40 முதல் 50 சதவீதம் மானியம்.

ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் மூலம் ஒரு எக்டர் உள்ள விவசாயிகளுக்கு ஆடு, மாடு, மண்புழு உரப்படுக்கை, தேனீ பெட்டி மற்றும் தேனீ குடும்பம், தீவனப்பயிர் ஆகிய வைக்கு மானியமும் மற்றும் நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் காவேரி டெல்டா மற்றும் பொன்னனியாறு சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர் வடிகால் மூலம் பரப்பு விரிவாக்கம் மற்றும் நுண்ணீர் பாசனத்திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த திட்டங்களில் பயன் பெற  விருப்பம் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/registeration-new-phy என்ற இணைய தளத்தின் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் 120 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 80 சதவீதம் இலக்கீடு அந்த கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

மேலும், விவரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top