Close
மே 20, 2024 7:50 மணி

கடின உழைப்பும் விடா முயற்சியும்தான் வெற்றியின் ரகசியம்: தடகள வீரர் சைனி வில்சன்.

ஈரோடு

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் 50வது விளையாட்டு விழாவில் பேசிய ஒலிம்பிக் தடகள வீரர் சைனிவில்சன்

.கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியை மாணவர்கள் கைக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் வெற்றியை தொடரமுடியும் என்று பிரபல தடகள வீரர் மற்றும் உணவு கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மும்பை பொது மேலாளர் சைனி வில்சன் கூறினார் .

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் 50 -வது விளையாட்டு விழா இன்று நடைபெற்றது .அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அவர் பேசியதாவது:

நான் ஒன்றாவது வகுப்பில் பயிலும் போதும் நான்காவது பயிலும் போதும் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றேன்.  அதன் தொடர்ச்சியாகத்தான் ஒலிம்பிக்கில் நான்கு முறை நான் பங்கேற்றேன்.

உலக அளவில் 80- க்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்றுள்ளேன் .திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும்கூட பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். எனவே மாணவ மாணவிகள் விளையாட்டு படிப்பு மற்றும் கலை போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் .

நாங்கள் பாட்டியாலா டெல்லி பெங்களூர் போன்ற இடங்களுக்குச் சென்று பயிற்சி பெற்றோம். பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் போது தொலை தொடர்பு வசதி கூட இல்லாமல் சிரமப்பட்டோம். ஆனால் இப்பொழுது ஏராளமான வசதிகள் உள்ளன.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்கப்பட்டுள்ளது .விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. நமது முதலமைச்சர் கூட ஒலிம்பிக் பரிசு பெறுபவர்களுக்கு ரூபாய் 3 கோடி வரை பரிசு தொகை உயர்த்தி அறிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் விளையாட்டு உள்கட்டமைப்பு இன்று பெருமளவில் வளர்ந்து உள்ளது .எனவே இதை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் சைனிவில்சன்.

ஈரோடு
போட்டிகளில் வென்ற அணிக்கு கோப்பை வழங்கிய சைனிவில்சன்

நிகழ்ச்சியில் சைனிவில்சனின் கணவர் மற்றும் அர்ஜூனா விருது பெற்ற நீச்சல் வீரர் மற்றும் ஐசிஎப் விளையாட்டு அலுவலர் வில்சன் செரியன் பேசியதாவது:

சிறிய வயதில் கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள குட்டையில் நீச்சல் பயிற்சி பெற்றேன். அப்பொழுது இரண்டு வாரம் பயிற்சி எடுத்தால் ஒரு வாரம் ஜுரம் மற்றும் சளி தொல்லை உருவாகும் .டாக்டர் நீங்கள் நீச்சல் பயிற்சி நிறுத்தினால் தான் உயிரோடு இருக்க முடியும் என்று கூறினார்.  இருந்தாலும் நான் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பயிற்சி பெற்றேன் .

14 வயதிலேயே தேசிய சாம்பியன் என்ற பட்டத்தை பெற்ற பிறகு தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு தேசிய அளவில் மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளேன். அன்று ஒரு கோல்ட் மெடல் உடன் ரூபாய் 500 தருவார்கள் .அப்போதெல்லாம் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம் .ஆனால் இப்போது கோல்ட் மெடல் உடன் ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது .

அதுமட்டுமல்லாமல் அதிக அளவு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.  எனது நிறுவனத்தில் கூட பல்வேறு விளையாட்டு வீரர்கள் பணியில் சேரும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால் வேலையில் சேர்ந்த உடன் சிலர் தொடர்ந்து விளையாடுவததை நிறுத்தி விடுகின்றனர். இது வருத்தத்துக்குரியது.  ஆனால் என்னைப் பொறுத்தவரை தேசிய சாம்பியன் பெற்ற பிறகும் வேலை கிடைத்த பிறகு திருமணம் ஆன பிறகும்கூட தொடர்ந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வந்தேன்.
தற்போது இளைஞர்கள் மது, சிகரெட், செல்போன் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பழக்கங்களை தவிர்த்து முறையாக பயிற்சியை தொடர வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும் .எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை, எனவே இன்றும் என்னால் பல்வேறு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடிகிறது. தற்போது விளையாட்டு பயிற்சிக்காக செல்லும் வீரர்கள் ஒரு ஐந்து நிமிடம் ஓய்வு கிடைத்தால் கூட உடனடியாக செல்போனை எடுத்து பார்க்க தொடங்கி விடுகின்றனர்.

எனவே பயிற்சியின் போது செல்போனை நாங்கள் வாங்கி வைத்துக் கொள்கிறோம் .எனவே மாணவ மாணவிகள் கடின உழைப்பு விடா முயற்சியுடன் படித்து விளையாட்டு அல்லது படிப்பில் முன்னேற வேண்டும் .தொடர்ந்து செல்போன் பார்ப்பது சிகரெட் மது போன்ற கெட்ட பழக்கங்களை தவிர்க்க வேண்டும்  என்றார் அவர்.

கல்லூரி அறக்கட்டளை தாளாளர் கேகே பாலுசாமி தலைவர் ராஜமாணிக்கம் பொருளாளர் விஜயகுமார் துணைத் தலைவர்கள் முருகேசன், மாணிக்கம், அருண்குமார் பாலுசாமி, ஜி ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், முதல்வர் சங்கர சுப்ரமணியம், இயக்குனர் வெங்கடாசலம் ,உடற்கல்வி இயக்குனர் தனலட்சுமி, செயலாண்மை துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top