மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களையும், வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன
நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கலியபெருமாள் அறிவிக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சரும் தற்போதைய போளூர் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் நம்பிக்கைக்குரிய கலியபெருமாள் திருவண்ணாமலை தொகுதியில் களம் காண்கிறார்.
கலியபெருமாள்திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளராக உள்ளார். இவர் 1989ஆம் ஆண்டு கழக பணி மற்றும் கட்சி பொறுப்பில் இருந்துள்ளார். பின்பு முன்னாள் ஒன்றிய மாணவரணி இணை செயலாளர், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்,முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் ,முன்னாள் இயக்குனர் அழகானந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வாங்கி யிலும் இருந்துள்ளார். கலியபெருமாள் முன்னாள் அமைச்சர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் விசுவாசி ஆவார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் விருப்ப மனுவை அளித்திருந்த நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடம் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி தனது விசுவாசியான கலிய பெருமாளுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தந்துள்ளார் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளடங்கி உள்ளது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரைக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் புதிய முகமாக அதிமுக சார்பில் கலிய பெருமாளுக்கு வழங்கப்பட்டுள்ளது .
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்களாக திமுக அமைச்சர் மாவட்ட செயலாளர் எ.வ. வேலு தனக்கு நம்பிக்கையான தற்போதைய எம்பி அண்ணாதுரை களம் இறக்கியுள்ளார், அதேபோல் அதிமுக எம்எல்ஏ மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தனது நம்பிக்கையான கலியபெருமாள் என்பவரை அதிமுக சார்பில் களம் இறக்கியுள்ளார். திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராமச்சந்திரன், மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உட்கட்சி பூசல் என பல சவால்களை அதிமுக வேட்பாளர் சந்திக்க வேண்டி இருக்கும் , திமுக மற்றும் அதிமுகவினர் சம பலத்தில் இருப்பதால் அதிமுகவின் உட்கட்சி பூசலை சமாளித்து வேட்பாளர் வேலை பார்த்தால் வெற்றி தோல்வி வாக்கு வித்தியாசம் குறைவாக தான் இருக்கும் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
பிரதான கட்சிகளின் இரு மாவட்ட செயலாளர்களும் தங்களுக்கு நம்பிக்கை உரியவர்களை வேட்பாளர்களாக களம் நிறுத்தி உள்ளனர், இதனால் திருவண்ணாமலை தொகுதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மக்களின் முடிவு என்ன என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.