Close
மே 18, 2024 8:12 காலை

மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை: ஆட்சியர் தொடக்கம்

புதுக்கோட்டை

புதுகையில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வில் பேசுகிறார், ஆட்சியர் கவிதாராமு

.புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில்  (23.03.2023) நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி யினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர்  பேசியதாவது:

தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாகக் கடத்துவதற்கு, ‘மாபெரும் தமிழ்க் கனவு” என்னும் இந்தப் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் தாங்கள் உணர்ந்ததை அடுத்த வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்ல முடியும். இதனால் விழிப்புணர்வுள்ள சமூகம் உருவாகும்.

இந்த ‘மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியில், ‘பகுத்தறிவு பேராயுதம்” என்னும் தலைப்பில் உரையாற்ற வருகை புரிந்துள்ள ஊடகவியலாளர் கார்த்திகைச் செல்வன் , ‘நீரின்றி அமையாது உலகு” என்னும் தலைப்பில் உரையாற்ற வருகை புரிந்துள்ள பாடலாசிரியர் யுகபாரதி, அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களையும், பல்வேறு கல்லூரிகளிலிருந்து  வந்திருக்கும் மாணவர்களையும்  இந்நிகழ்ச்சியை  ஏற்பாடு செய்திட உதவிய அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின ருக்கும் வாழ்த்துகள்.

நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.

எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்,

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், கல்விப் புரட்சி, அரசின் திட்டங்கள் மற்றும் அதனைச் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு ‘மாபெரும் தமிழ்க் கனவு” சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இந்த நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்தில்  நடைபெறுவது மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்தூன்றிப் படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் உரையாற்ற உள்ள இரு சிறந்த ஆளுமைகளின் உரைகளைக் கேட்டு நீங்கள் பயனடைவதுடன், சக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

மேலும், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிக் கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும், புத்தகக் காட்சி அரங்கும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்  ஆட்சியர் கவிதா ராமு.

நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் கார்த்திகைச்செல்வன் பேசியதாவது:

புதுக்கோட்டை
தமிழ்க்கனவு பரப்புரையில் பேசிய ஊடகவியலாளர் கார்த்திகைசெல்வன்

பகுத்தறிவு என்பது வரலாறு மற்றும் உண்மைக்கு புறம்பாக கூறப்படும் தகவல்களை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொணர்வதே ஆகும். பகுத்தறிவிற்கு கல்வி மிக, மிக முக்கியமானதாகும்.

இக்கல்வி மூலமாகவே நமக்கான சுதந்திரத்தினை நாம் அடைய முடியும். தமிழ் மொழி நெடுங்கால தொண்மையை யும், பெரும்மையையும் கொண்டது. 34 – க்கும் மேற்பட்ட பெண்பால் புலவர்கள் சங்க இலக்கியங்களில் பல்வேறு பாடல்களை வழங்கியுள்ளார்கள்.

மேலும் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே கீழடி நாகரீகம் மேலோங்கி இருந்ததற்கும், நமது புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 1 மற்றும் 2 ஆம் நூற்றாண்டிலே யே பயன்படுத்தப்பட்ட பிரமீடு எழுத்துகள் கண்டுபிடிக்கப் பட்டதன் மூலம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழ் சமூகம் தொண்றுதொட்டு வளர்ந்து வருகிறது.

அதன் பிறகான காலத்தில், நாம் பெற்ற கல்வி, நமது சமூகம், நமது முன்னேற்றம் என்ன ஆனது, எங்கே போனது என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்ததில், நமக்கான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்காக பகுத்தறிவே பேராயுதமாக இருந்து வருகிறது. இப்பகுத்தறிவு நம்மிடையே வளர்வதற்கு அப்போதைய தலைவர்கள் விதைத்த விதைகளே காரணம். ஒட்டுமொத்தமான வளர்ச்சியே நமது சமூக வளர்ச்சி ஆகும்.

தற்போதைய நமது நிலைமை மற்ற மாநிலங்களை காட்டிலும் ஒருபடி முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. வெற்றியாளர்களை வெளியில் தேடாமல் நமது குடும்பத்தில் இருந்தே தேர்ந்தெடுக்க வேண்டும். இதன்மூலம் உங்களின் வெற்றி அடுத்த தலைமுறையின் வெற்றிக்கு உந்து சக்தியாக விளங்கும் வகையில் செயல்பட வேண்டும். போட்டிகள் நிறைந்த இவ்வுலகத்தில் கூட்டத்தில் ஒருவனாக இல்லாமல், தனி ஒருவனாக இருந்து பெண்கள் அனைவரும் சாதிக்க வேண்டும் என்றார்  கார்த்திகைச்செல்வன்.

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது:

தமிழை விட தொண்மையான, பண்பாடுமிக்க வேறு எந்த மொழியும் உலகில் இல்லை. திராவிட பண்பாடு என்பது நீரை அடிப்படையாகக் கொண்டது. நான் திரைப்படங்களில் பல வெற்றி பாடல்களை எழுதுவதற்கு, சங்க கால இலக்கியங் களே மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

நாம் அனைவரும் கல்வியை நோக்கி நகரும் பொழுது வேறுபாடுகள் நீங்கி சமத்துவம் நம்மிடையே வளர்ந்து வருகிறது. எந்த ஒரு பொருளும் சாதாரண நிலையிலிருந்து வியாபாரம் என்ற அடுத்த கட்டத்திற்கு நகரும் பொழுது பல்வேறு சிக்கல்கள் ஆரம்பமாகின்றன.

நீரின் மீது மக்களாகிய நாம் அனைவரும் அக்கரை செலுத்தும் பொழுது, அவற்றின் அவசியம் குறித்தும், அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் புரிய வரும். நீர் நம் வாழ்க்கையில், பண்பாட்டில், அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாம் பேசும் தமிழ் மொழியில் உள்ள அனைத்து சொற்களும் பண்பாட்டை குறிக்கும் வகையிலேயே அமைய பெற்றுள்ளது.

எனவே மாணவ சமுதாயமாகிய நீங்கள் அனைவரும் தமிழின் பெருமை குறித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில், உங்களது செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றார் பாடலாசிரியர் யுகபாரதி.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்.ஜி.அமீர் பாஷா, வட்டாட்சியர் விஜயலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top