Close
மே 20, 2024 2:31 மணி

தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்பு.. 5 அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றம்…!

சென்னை

முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழக அமைச்சரவையில் இடம் பெற்ற டிஆர்பி. ராஜா உள்ளிட்ட 5 அமைச்சர்கள்

தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். டி.ஆர்.பி.ராஜாவிற்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின்பேரில், அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி. ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் கவர்னர் மாளிகையில் இருந்து கடந்த 9 ந்தேதி அறிவிப்பு வெளியானது.

இதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில்  மே 11 -ஆம் தேதி  காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதனையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு டி.ஆர்.பி.ராஜா பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் அவரின் குடும்பத்தினர், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, சு. முத்துசாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

பதவி ஏற்பு விழா முடிந்தவுடன் ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிந்தனைக்கு ஏற்ப எனது செயல்பாடு இருக்கும் என்றார். தமிழக அமைச்சரவையில் முதலமைச்சருடன் சேர்த்து 35 பேர் உள்ளனர்

ஐந்து  அமைச்சர்களின் துறை பொறுப்புகள் மாற்றம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பொறுப்பு தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த 2021 மே 7 -ஆம்  தேதி பொறுப்பேற்றது. கடந்த ஆண்டில் அமைச்சரவையில் முதன்முதலாக மாற்றம் செய்யப்பட்டது. ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கருக்கு மாற்றப்பட்டது.

பிறகு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறைகள் அளிக்கப்பட்டன. அதே நேரம் கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இதுதவிர, வீட்டுவசதி துறையில் இருந்து சிஎம்டிஏ பிரிக்கப்பட்டு, அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் தரப்பட்டது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3 -ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
தமிழக அமைச்சர்கள் ஆளுநருடன் எடுத்துக்கொண்ட குழு படம்

புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கான இலாகா ஒதுக்கீட்டு விவரத்தை கவர்னரின் முதன்மை செயலாளர் அறிவிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டார்.

அதன்படி, புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தொழில்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

இதுவரை தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதி இலாகா வழங்கப்பட்டுள்ளது.

மேலும் திட்டம், மனிதவள மேம்பாடு, பென்ஷன், புள்ளியியல் மற்றும் தொல்லியல் துறைகளையும் தங்கம் தென்னரசு கவனிப்பார். அவர் இனி, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்..

செய்தித்துறை அமைச்சராக இருக்கும் எம்.பி.சாமிநாதன் வசம் கூடுதல் இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தகவல், பட தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறுப்புகளை கவனிப்பார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அவர்  இனி செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்  என்று அழைக்கப்படுவார்.

நிதித்துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அந்த துறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தகவல் தொழில் நுட்பம், டிஜிட்டல் சேவை துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர் இனி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்  என்று அழைக்கப்படுவார்.

இதுவரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜிடம் இருந்து அந்த துறை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு பால்வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் இனி, பால்வளத்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.  இவ்வாறு கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.பி.ராஜா -தொழில்துறை.

 தங்கம் தென்னரசு -நிதி, மனிதவள மேம்பாடு.

எம்.பி.சாமிநாதன் -தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை.

பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் -தகவல் தொழில்நுட்பம்.

மனோ தங்கராஜ் -பால்வளத்துறை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top