நாமக்கல் உழவர் சந்தையை, தமிழக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை துறையின் முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர் பிரகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அவர் நாமக்கல் உழவர் சந்தையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் கழிவுநீர் உழவர் சந்தையின் உள்ளே வராமல் தடுக்க, சாலை மட்டத்திற்கு தரையினை உயர்த்துவதற்கு கருத்துரு அனுப்ப அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
மேலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை சோசியல் மீடியாக்கள் மற்றும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேலும், வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் விவசாயிகள் ஆலோசனை மையம் மற்றும் நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டு சுற்றுச்சுவர் மற்றும் எடை மேடை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டார்.
அந்த வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்களை சேமிப்பு கிடங்காக புதுப்பித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வில் நாமக்கல் வேளாண்மைத் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) நாசர், விற்பனைக்குழு செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.