Close
நவம்பர் 1, 2024 12:30 காலை

கீழ்பவானி கால்வாயில் ரூ.720 கோடியில் சீரமைப்புத் திட்டம்: அமைச்சர் மீது ஆயக்கட்டுதாரர்கள் குற்றச்சாட்டு

கீழ்பவானி விவசாயிகள்

கூட்டத்தில் பேசிய கீழ்பவானி ஆயக்கட்டு பாசன தாரர்கள் சங்க நிர்வாகி பெரியசாமி

கீழ்பவானி கால்வாயில் ரூ.720 கோடியில் சீரமைப்பு திட்டத்தில், அமைச்சர் சு.முத்துசாமியின் தவறான அணுகுமுறையால் திட்டம் தேக்கமடைந்துள்ளதுடன், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக கீழ்பவானி ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அந்த சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் கால்வாயை சீரமைக்க 720 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தனர். ஆட்சி மாற்றத்தால் பணிகள் நடைபெறவில்லை என தெரிவித்த விவசாயிகள், அமைச்சர் முத்துசாமியின் தவறான அணுகுமுறையால் திட்டம் தேக்கம் அடைந்திருப்பதாக குற்றம் சாட்டினர்.

இந்த சீர்குலைவு வேலைகள் அனைத்தும் தவறாக தண்ணீர் எடுத்து பயன்படுத்தும் தொழில் அதிபர்களுக்கும் வணிக வேளாண்மை செய்பவர்களுக்கும் ஆதரவாக செய்து வரும் நடவடிக்கைகள் என தெரிவித்தனர். கால்வாய் பிரச்சனையில் முறையாக பதிவு செய்யப்பட்ட நீர்வளத் துறையின் ஆவணங்களை ஆராயாமலும் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்ட இரண்டு ஆய்வுகளின் அறிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமலும் இந்த அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

பிரச்னையை சுமூகமாக தீர்ப்பதற்கு பொறுப்பேற்றிருந்த மாவட்ட அமைச்சர் முத்துசாமி அதுபோன்ற நடவடிக்கை களில் ஈடுபடாமல் நேரடியாக கால்வாயில் பெரும் கூட்டங்களை கூட்டி பதற்றத்தை உருவாக்கி விட்டார் என்றும், தவறான பரப்புரைகள் நடப்பதற்கு அரசு தரப்பில் இருந்து பதில் எதுவும் தரப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

எனவே ஆயக்கட்டு பாசன உரிமையை பாதுகாப்பதற்காக கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாட்டை ஜூலை 10 ஆம் தேதி சிவகிரியில் நடத்துவதாக அவர்கள் அறிவித்தனர். கீழ்பவானி பாசனத்தில் முறைகேடான நீரேற்றுப் பாசனங்களை உடனே தடை செய்ய வேண்டும், கால்வாயை சீரமைத்து அனைத்து பாசனதார்களுக்கும் சமச்சீரான தண்ணீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும்முன்வைத்துள்ளனர் .

கடந்த அதிமுக ஆட்சியில் 720 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. 1955 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கால்வாயில் உள்ள பழுதுகளை சீரமைக்க மதகுகளை மறுகட்டுமானம் செய்யவும் கரைகளை பலப்படுத்தும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் இரு தரப்பிலும் அழைத்துப் பேசி பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டிய அமைச்சர் முத்துசாமி பிரச்சனையை சரியான முறையில் கையாள வில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும். எனவே காலத்தின் அவசியத்தை உணர்ந்து கால்வாய் சீரமைப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top