Close
மே 13, 2024 12:39 காலை

உலகத் தாய்மொழிகள் தினம் சில குறிப்புகள்…

புதுக்கோட்டை

உலகத் தாய்மொழிகள் தினம்

உலகத் தாய்மொழிகள் தினம் உலகத் தாய்மொழிகள் தினம் இன்று…

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதி தான். தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில் உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்படுவதை அப்போது மக்கள் ஏற்கவில்லை.

1952 -ஆம் ஆண்டு இந்த நாளில், அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டது.அந்த போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்த நாள், உலக அளவில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சியாலும், அனைத்துலக அமைப்புகளின் ஆதரவுகளாலும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், யுனெசுக்கோ அமைப்பின் பிப்ரவரி 21-ல் 1999 -ஆம் ஆண்டு பொது மாநாட்டின் 30 -ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய்மொழி நாளாக அறிவித்தது. 2000 -ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு அவர்கள் பேசுகின்ற மொழி அல்லது அவர்களுக்கு புரிகின்ற மொழியில் கல்வி கிடைப்பதில்லை. இன்றைக்கு உலகம் முழுவதும் சுமார் ஏழாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.

பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஏற்கெனவே பல மொழிகள் அழிந்து விட்ட நிலையில்,அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாச்சாரமும், அறிவுசார் பாரம்பரியமும் அத்தோடு போய்விடுகின்றன என்பதை கணக்கில் கொண்டு யுனெஸ்கோ அமைப்பு உலக தாய்மொழி தினத்தை அறிமுகப்படுத்தி கொண்டாடி வருகிறது.

பன்மொழி மற்றும் பன்முக கலாசார சமூகங்கள் தங்கள் மொழிகள் மூலம் பாரம்பரிய அறிவு மற்றும் கலாச்சாரங்களை நிலையான வழியில் கடத்துவதற்கு, பல மொழிகளில் உள்ள வேறுபாடுகளைப் பாதுகாப்பதற்கு, மொழியியல் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை பேணுவதற்கு யுனெஸ்கோ முயன்று வருகிறது.

பங்களாதேஷ் எடுத்த முயற்சி தான் தாய்மொழி தினத்தை கொண்டாடு வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தனிமனிதனாக நாம் முதலில் நம் தாய்மொழியைப் பிழையில்லாமல் முறையாக உச்சரிக்க வேண்டும், பிறமொழிக் கலப்பில்லாமல் தனித்தமிழில் இயன்றவரை முயன்று பேச வேண்டும்.

நம் பிள்ளைகளுக்கு நம் மொழியின் பெருமைகளை எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும், இத்திருநாளின் பின்னணி என்ன என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும். 1952 -ல் வங்கத்தில் நடந்த சிறிய மொழிப்போர் உலகக் கவனத்தை ஈர்த்தது போல, அதற்கு முன்பே 1937-ல் நம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் நடந்த மொழிப்போர் ஏன் உலகின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதன் அரசியல் பின்னணியை அவர்கள் அறியச் செய்ய வேண்டும்.

சமூக கட்டமைப்புக்களின் நிலையான உறுதித் தன்மைக்கு இந்த மொழியின் நிலைகுலையாத இருப்பும் அவசியமாகின்றது. அத்தகைய மொழியறிவிற்கு தாய்மொழி என்னும் ஒருவருடைய உணர்வுமொழிகள் இன்றியமையாத தாகின்றன. இந்தப் பூமிப் பந்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனிற்கும் தமது உணர்வுகளை சக மனிதனோடு பதிர்ந்து கொள்வதற்கு தாய்மொழி என்ற ஒன்று இருக்கின்றது.

தாய்மொழிதான் நமக்கு வாழ்வு கொடுத்த மொழி. நாம் சிந்திப்பது தாய்மொழியின் மூலம்தான். நம் அறிவு வளர்ந்தது தாய்மொழியின் மூலமாகவே.

அலுவல் நிமித்தமாக ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளைக் கற்றோம் அல்லது கற்கின்றோம். அது தவிர்க்க முடியாதது. அதற்காக தமிழுக்கும் நமக்கும் உள்ள ஒட்டும் உறவும் குறைந்துவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பண்பாடு இருக்கிறது. நமது தமிழ்மொழி தலைசிறந்த பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. அதைப் பேணிக்காப்பது நமது தலையாய கடமை.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top