Close
மே 11, 2024 3:09 மணி

மண்ணில்லாமல் நிலம் இல்லாமல் ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்..!

விவசாயத்திற்கு மிகவும் அடிப்படையாக இருப்பது தண்ணீர் மற்றும் மண்.
ஆனால் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மண்ணில்லாமல், நிலம் இல்லாமல் செடிகளை வளர்க்கும் முறை, நடைமுறைக்கு வந்துவிட்டது.

ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்” – இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தற்போது பலர் விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை அடைந்து வருகின்றனர். விவசாயம் செய்வதற்கு முக்கிய தேவை மண். இந்த மண் இல்லாமலேயே, நீரின் மூலமாக விவசாயம் செய்யும் தொழில்நுட்பம் தான் ஹைட்றோபோனிக்ஸ்.இந்த முறையில் மண் இல்லாமலேயே கீரைகள், காய்கறிகள்,பூக்கள்,பழங்கள் ஆகியவற்றை பயிர் செய்யலாம்.

நாம் மண்ணை நம்பித்தான் இன்று எல்லாருமே விவசாயம் செய்கிறோம். மண் தான், உணவு உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கிறது. விவசாயத்தின் வெற்றி பெறுவதற்கும், தோல்வி அடைவதற்கும் பெருமளவில் மண்ணின் வளம் தான் காரணமாக அமைகிறது. குறிப்பாக இயற்கை விவசாயமே மண்வளத்தை மேம்படுத்துவதிலும், அதை காப்பாற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பயிர் வளர்ப்பில் மண்ணின் பங்கு மகத்தானது. மண் தாவரத்தை ஆதரிக்கிறது. அவற்றை தாங்குவதற்கான ஆதாரமாக செயல்படுகிறது. வேர்கள் தன்னுள் ஊடுருவி தாவரம் தன்னை உறுதியாக நிறுத்திக் கொள்ள உதவுகிறது. பயிர்களுக்கு தேவையான நீரை தன்னுள் நிறுத்தி வேர்கள் உறிஞ்சிக்கொள்ள வழிவகுக்கிறது.

பலவிதமான நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் வாழ வழிவகுத்து தழைச்சத்தையும், மணிச்சத்தையும் தாவரம் பெற்றுக்கொள்ள ஏதுவாகிறது. தேவையான ஊட்டங்களையும், நுண்ணூட்டங்களையும் செடிகள் பெற்றுக்கொள்வதற்கான ஆதாரமாக இருக்கிறது.

இன்று விவசாயம் வெற்றிகரமாக இல்லாமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது விவசாயிகளால் கட்டுப்படுத்தமுடியாத காரணிகள் பல உற்பத்தியைப் பாதிக்கக் கூடியவையாக இருப்பது தான். நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய காரணிகளில் ஒன்று இருந்தால் கூட தொழிற் சாலைகளில் உற்பத்தியை பாதிக்காத வகையில், அவற்றை எளிதாக கட்டுப்படுத்த முடிகிறது.

ஆனால், விவசாய உற்பத்தியில் கட்டுப்படுத்தும் காரணிகளை விட கட்டுப்படுத்த முடியாத காரணிகளே அதிகம் இருக்கின்றன. இதுவே விவசாயத்தில் பெரிய சவால்.

இயற்கை முறை விவசாயத்திற்கு ஒவ்வொரு நாடும், நம்மில் சிலரும் ஏன் முக்கியத்தும் தருகிறார்கள் என்றால்.., வெறும் மனிதனின் உடல்நலம் மட்டும் இதில் கருத்தில் கொள்ளப்படவில்லை. இந்த மண், நீர், இயற்கை வளங்கள் அனைத்தும் தற்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் நமக்கானது மட்டுமல்ல.

அடுத்து வாழவிருக்கும் மனித இனத்திற்கும், சிறு சிட்டு குருவி முதல் பெரும் பலம் கொண்ட யானை வரை அனைத்திற்கும் பொதுவானது, மண்ணை மலடாக்கி, நீரை அசுத்தப்படுத்தி அடுத்தடுத்து வரும் தலைமுறையினரை கையேந்த விட கூடாது என்பதே இயற்கை முறை விவசாயத்தின் கொள்கை. இதில் மனிதனின் உடல் நலமும் அடங்கும்.

உலகில் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் மண்ணை சார்ந்தே வாழ்கின்றன. எனவே மண் இல்லையேல் மனிதன் இல்லை. மண் வளம் காப்போம்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர்🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top