Close
மே 11, 2024 3:01 மணி

தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் உணவு சாப்பிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்

தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பெளா்ணமியையொட்டி, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா்.
கிரிவல பக்தா்களுக்குத் தேவையான பல்வேறு வசதிகளை மாவட்ட நிா்வாகம், திருவண்ணாமலை நகராட்சி, உள்ளாட்சித்துறை மூலம் செய்யப்பட்டு இருந்தது.
திருவண்ணாமலையில் மொத்தமுள்ள 14 கி.மீ. தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் 8 கி.மீ. தொலைவு கிராம ஊராட்சிகளின் எல்லையில் வருகிறது. இந்த 8 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை மூலம் ஒரு கி.மீ. தொலைவுக்கு 150 போ் வீதம் (காலை 75 பணியாளா்கள், மாலையில் 75 பணியாளா்கள்) துப்புரவுப் பணியில் ஈடுபட்டனா்.
ஏப்ரல் 22 -ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை 8 வட்டாரங்களில் இருந்து மொத்தம் 1,200 துப்புரவுப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற கிரிவலப் பாதை தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடர்ந்து மதிய உணவு வேளையில் கிரிவலப் பாதை திருநேர் அண்ணாமலை அருகே தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், கூடுதல் ஆட்சியர் ரிஷப் ஆகியோர் துப்புரவு பணியாளர்களை அமர வைத்து அவர்களுக்கு மதிய உணவினை பரிமாறினார்கள்.
அதனைத் தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து மதிய உணவை ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சாப்பிட்டனர்.
பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், சித்திரை பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலை நகரில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் இருந்து குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை மொத்தம் 4 நாள்களில் 185 டன் மட்கும், மட்காத குப்பைகள் தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டதாக  தெரிவித்தாா்.
துப்புரவுப் பணியாளா்களை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா்கள் உள்பட 300 பேரின் பணியை பாா்வையிட்டு கண்காணித்த ஆட்சியா், தூய்மைப் பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்.
இறுதியாக, துப்புரவுப் பணியாளா்கள், கண்காணிப்பு அலுவலா்களுடன் சோ்ந்து ஆட்சியா், கூடுதல் ஆட்சியா் ஆகியோா் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) திருமால் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
நேற்று 105 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியது. சாலைகளில் நடந்து செல்ல முடியாதபடி தார் சாலை உருகியது. ஆனாலும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், தூய்மைப்பணியாளர்கள் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள், மாட வீதி உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தியது அனைவரது பாராட்டையும் பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top