Close
டிசம்பர் 18, 2024 9:20 மணி

நாமக்கல் மாவட்டத்தில் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், அணியாபுரம்புதூர் கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கலெக்டர் உமா முகாமை துவக்கி வைத்துப் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 6-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி இம்மாதம் 16ம் தேதி முதல் ஜன. 20ம் தேதி வரை, மொத்தம் 36 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மாவட்டத்தில் 2,43,708 பசு மாடுகள், 54,692 எருமை மாடுகள் என மொத்தம் உள்ள 2,98,400 கால்நடைகளுக்கு, 100 சதவீதம் முழுமையாக தடுப்பூசி போடப்படவுள்ளது.

தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோமாரி நோய் இரட்டைக் குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் நச்சு உயிரி தொற்று நோய் ஆகும். கோமாரி நோயினால் கால்நடை வளர்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது.

இக்கொடிய நோயை தடுக்கும் வகையில், கோமாரி நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாடுகள் மற்றும் எருமைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

எனவே, நாமக்கல் மாவட்ட விவசாய பெருமக்கள் 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை அவர்களுக்கு அருகில் நடைபெறும் முகாமிற்கு அழைத்துச் சென்று, கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என கூறினார்.
முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top