Close
மே 2, 2024 12:04 மணி

கிராம அறிவு மையம் சார்பில் ஓணாங்குடி ஊராட்சியில் உலக சுகாதார நாள் விழா

புதுக்கோட்டை

ஓணாங்குடியில் நடைபெற்ற உலக சுகாதார நாள் விழாவில் பேசுகிறார், முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்

புதுக்கோட்டை மாவட்டம், ஓணாங்குடி கிராம ஊராட்சி மற்றும் கிராம அறிவு மையம் இணைந்து நடத்திய உலக சுகாதார நாள்  விழா சீகம்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஓணாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். அரிமளம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எம்.மேகலாமுத்து முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் பங்கேற்று பேசியதாவது:  உலக சுகாதாரதினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 -ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.

உலக சுகாதார சபை முடிவின்படி, உலக சுகாதார நிறுவன முன்னெடுப்புடன் 1950 ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப் படுகின்றது. 2023 ஆம் ஆண்டின் உலக சுகாதார தின கருபொருள்  அனைவருக்கும் சுகாதாரம் எனபதாகும்.

சுகாதார தினத்தின் முக்கிய நோக்கம் உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ சுகாதாரத்தைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். உலக சுகாதார நிறுவன கூற்றின்படி, சுகாதாரம் என்பது முழுமையான “உடல், மனம், சமூக நலன் ஆகியவைகளை உள்ளிடக்கியதாகும். நோய் அல்லது பலவீனமாக இல்லாமல் இருப்பது மட்டுமல்ல சுகாதாரம்.
மத்திய மாநில அரசுகளின் மற்றும் சுகாதார அமைப்புகளின் பல்வேறு முயற்சிகளால் சுகாதார கட்டமைப்பு நன்கு முன்னேறியுள்ளது. இந்த முயற்சிகளின் காரணமாக தமிழ்நாட்டின் சராசரி ஆயுள்காலம் 72 ஆகவும், இந்தியாவின் சராசரி ஆயுள் காலம்  69 ஆகவும்  அதிகரித்துள்ளது.

ஊட்டச்சத்து பாதுகாப்பு சுகாதாரத்தின் மிக முக்கியமான அம்சமாகும். தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட பல ஊட்டச்சத்து அம்சங்களில் முன்னேறியிருந்தாலும், உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள குறியீடுகளை எட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் வயதிற்கேற்ற உயரம் இல்லாதவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாகவும், ரத்த சோகை உள்ளவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கு மேல் உள்ளது. எனவே, ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியமான ஒன்றாகும்.

அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் உணவு பொருட்களை உண்டு எவ்வாறு ஊட்டச்சத்தை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம அறிவு மையம், ஊராட்சியுடன் இணைந்து அனைத்து பங்காளர்களையும் ஒருங்கிணைத்து ஓணாங்குடி கிராமத்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத கிராமமாக மாற்ற அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடும் என்றார் ராஜ்குமார்.

நிகழ்ச்சியில் அரிமளம் வட்டார அரசு மருத்துவ அலுவலர் ஆர்.குமரவேல் சுகாதாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கி கூறினார். நிகழ்வில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சி.ஆண்ணாமலை வாழ்த்திப்பேசினார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள ஒருங்கி ணைப்பாளர் டி.விமலா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில், விவசாயிகள், சுய உதவி குழு உறுப்பினர்கள், சுகாதார பணியாளர்கள் உன்கிட்ட 150 பேர் கலந்து கொண்டனர்.
ஓணாங்குடி ஊராட்சி செயலர், ஆர்.ரெங்கநாதன் வரவேற் றார். கிராம அறிவு மையப் பணியாளர் வி.மேனகா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top